வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் வருகின்ற நாளை ஞாயிற்றுக்கிழமை(03.07.2016) அன்று காலை 10.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் ஒன்றுகூடல் நிகழ்வின்போது வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட 1000 பட்டதாரிகளை வடமாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நாடளாவியரீதியில் க.பொ.த உயர்தரச் சித்தித் தகுதியுடைய 23000 பேரை ஆசிரியர்களாகப் பாடசாலைகளுக்கு உள்ளீர்ப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக 8000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு என்பன தொடர்பாகவும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் நிர்வாகக் கட்டமைப்பைப் பலப்படுத்துதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
எனவே பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகள், தேசிய உயர் தொழில் நுட்பக் கல்லூரிப் பட்டதாரிகள் அனைவரையும் தவறாது குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.