வடமாகாண நிர்வாகத்துக்கு பிரதம நீதியரசர் அறிவுரை

mohan_peirisவடமாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் மாகாணத்தின் நல்லாட்சியை மனதில் கொண்டு ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் வழியாக, நட்புறவு ரீதியாக இணைந்து வேலைசெய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கோரியுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் எண்ணத்தை வடமாகாண நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வழக்குரைஞர்களிடம் நேற்று (14) திங்கட்கிழமை கேட்டுக்கொண்டார்.

இதனை தத்தம் தரப்பினரிடம் பேசி அடுத்த தவணையின்போது ஒரு நட்பு ரீதியான தீர்வுடன் வருமாறுமாறும் பிரதம நீதியரசர், வழக்குரஞ்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரினால், மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக விடுக்கப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான வழக்கை நேற்று திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொண்ட போதே பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சரினால், வடக்கு மாகாண நிர்வாக நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம் தனது உரித்துக்கள் பறிக்கப்படுவதாக பிரதம செயலாளர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமியால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, மார்ச் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படபோது, முதலமைச்சரினால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் அன்று தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்ட போது சுற்றறிக்கையை விளக்கிகொள்வதாக முதலமைச்சர், சத்தியகடதாசி ஊடாக மன்றுக்கு அறிவித்துள்ளார் என்று அவர் சார்பில் ஆஜராகியிருந்த வழக்குரைஞர்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனிடையே குறுக்கிட்ட மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரஞ்சர்கள், இந்த சுற்றறிக்கையை முறைப்படி வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டினர். அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த, முதலமைச்சர் சார்பில் ஆஜராகியிருந்த வழக்குரஞ்சர்கள், சத்தியக்கடதாசி மூலமாக வாபஸ்பெற்றுவிட்டோம் என்றனர்.

இதனையடுத்தே, பிரதம நீதியரசர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் வழக்கு விசாரணையை ஜூலை 28 ஆம் திகதி இதே நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

Recommended For You

About the Author: Editor