வடமாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆட்சேர்ப்பு

Vacanciesவடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆசிரியர் சேவையின் வகுப்பு மூன்றாம் தரம் இரண்டு பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த ஆசிரியர் சேவைக்கு 18 வயதுக்கும், 40 வயதிற்கும் இடைப்பட்ட இலங்கை டிப்ளோமாதாரிகள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

குறித்த பதவிக்கான வெற்றிடங்கள் யாழ்ப்பாணத்தில் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படுவதுடன் இவ் வெற்றிடங்கள் நிரப்படவுள்ளன.

அத்துடன் வடமாகாணத்தில் நானாட்டன், முசலி, மடு, மாந்தை மேற்கு, வவுனியா தெற்கு, செட்டிக்குளம், நெடுங்கேணி, ஓமந்தை, மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டிசுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலி ஓயா, கண்டாவளை, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நடைபெறும் திறந்த பரீட்சை நடைபெறும் இடங்களாக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கனகராயன்குளம், சாவகச்சேரி, நெல்லியடி ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலதிகக் கல்வித் தகைமைகள், ஆட்சேர்ப்பு முறை, விண்ணப்பிக்கும் முறை. பரீட்சைக் கட்டணம் ஆகிய விபரங்களை இலக்கம் 481, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.