வடமாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லை அதிகரிப்பு

வட மாகாணத்தில் அரச சேவையில் இணைத்துக்கொள்பவர்களின் வயதெல்லையை 40 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லை தற்போது 35 ஆக காணப்படுகின்ற நிலையில், வேலையற்ற பட்டதாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் நகரிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உள்ளதென சுட்டிக்காட்டினார்.

தினமும் தனது காரியாலயத்திற்கு வருகைதரும் வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஆளுநராக பதவிவகிக்கின்ற காலத்தில், முக்கிய பிரச்சினைாக வட மாகாணத்தில் வாழ்க்கை ஜீவனோபாயத்திற்கு உள்ள வேலைத்திட்டங்கள் இல்லாமை, பெரிய பிரச்சினையாக உள்ளது.

அதில் முக்கியமான பிரச்சினையாக, 10, 15 வருடங்கள் கஷ்டப்பட்டு தொடர்ச்சியாக வேலை செய்த போதிலும், நிரந்த நியமனம் கிடைக்காமைக்கு, வயது பிரச்சினை முக்கிய பிரச்சினையாக உள்ளது.

குறிப்பாக அரச கொள்கையின் அடிப்படையில் 35 வயதுக்குட்பட்டவர்களை உள்வாங்குகின்ற நிலை உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்தப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, வடமாகாணத்தில் அரச வேலை வாய்ப்பிற்கு உள்வாங்குகின்றவர்களின் வயதெல்லையை 40 ஆக உயர்த்தியுள்ளேன்.

இதுவரை காலமும் நிரந்தரமாக்க முடியாமல் இருந்தவர்களுக்கு இந்த வயதெல்லை வரப்பிரசாதமாக அமையும் என்பதை நான் நம்புகின்றேன்.

வடமாகாணத்தில் ஆசிரியர் சேவையில் விஷேடமாக மூன்று காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நியமனங்கள் வழங்கப்படுகின்றது.

தொண்டர் ஆசிரியர்கள், ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுகின்றவர்கள், பகுதியளவில் கடமையாற்றுகின்றவர்கள் ஆகிய மூன்று வகைப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். ஆகவே அவருடைய கரிசணையின் அடிப்படையில், பட்டதாரிகள் நியமனங்களுக்கான அமைச்சரவைப் பத்திரங்களை தயாரிப்பதற்கான பணிகளை தீர்மானித்துள்ளார்கள். அமைச்சரவை அங்கீகாரத்தோடு பதவிக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts