வடமாகாணசபை த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் – தீவக மக்கள் சந்திப்பு

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்னமும் அரியகுட்டி பரஞ்சோதியும் யாழ். தீவுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

தீவகத்தின் தம்பாட்டி, மண்கும்பான், அல்லைப்பிட்டி, ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்னமும் அரியகுட்டி பரஞ்சோதியும் சென்றிருந்தனர்.

மேற்படி பிரதேசங்களிலுள்ள சனசமூக நிலையங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கம், கடற்றொழிலாளர் சங்கம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்தும் இவர்கள் கலந்துரையாடினர்.

இதன்போது மேற்படி பிரதேசங்களிலுள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்,

இந்தப் பிரதேசங்கள் கடந்த வருடங்களாகவிருந்து பல பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதுடன், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பாகுபாடு காட்டப்பட்டு இந்தப் பிரதேசங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய வடமாகாணசபை இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து எமது பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும் எனக் கூறினர்.

இதற்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள், மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மாகாண அமைச்சர்களின் உதவியுடன் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.