வடமாகாணசபைக்கு முன்னால் போராட்டம்

வடமாகாணசபைக்கு முன்னால் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது.வல்வெட்டித்துறை கிழக்கு மீனவர்கள் இழுவைப்படகு மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே மீண்டும் குறித்த மீன்பிடி முறையினை அனுமதிக்குமாறு கோரியுமே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

north-provincial-vadakku-npc

இதேவேளை குறித்த போராட்டம் அரசியல் கட்சி ஒன்று பின்னணியில் இருப்பதாகவும் அவர்களே வாகன வசதிகளை செய்து கொடுத்து வடமாகாண சபைக்கு முன்னார் போராட்டத்தில் ஈடுபடுமாறும் கூறியதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக யாழ்.மாவட்ட நீரியல்வளத்துறைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி கருத்துத் தெரிவிக்கும் போது, இழுவைப்படகு தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளுள் ஒன்று. அதனை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டோம். இந்த நடைமுறையினை கடற்றொழில் அமைச்சு நடைமுறைப்படுத்தியது.

அதனை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது. குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தினைப் போலவே வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர்களும் அமைச்சுடன் தொடர்பு கொண்டு தங்களுடைய பிரச்சினையை தெரிவித்து தீர்வினைப் பெற்று கொள்ள வேண்டும்.

அத்துடன் மாற்றுத் தொழில் தொடர்பிலும் அமைச்சிடமே பேசி தீர்வினைக் காண வேண்டும். எங்களால் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட முடியும். சட்டத்தை மாற்றவோ அல்லது அதனை மீறி செயற்படவோ முடியாது.

எனினும் தடை செய்யப்பட்ட இழுவைப்படகு முறையினை பயன்படுத்தி தொழில் செய்வோர் தொடர்ந்தும் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்படுவர்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், சட்டரீதியான மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது