வடமராட்சியில் வாகன விபத்தில் இருவர் பலி

யாழ். வடமராட்சி கரணவாய் இமையாணன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் வாகன சாரதி உட்பட இருவர் பலியானதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடும் மழை பெய்தது. இந்த  நிலையில் பருத்தித்துறையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிக்கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த பனைமரம், மின்சாரக்கம்பம் ஆகியவற்றுடன் மோதிச்சென்று இறுதியாக கடையொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது. 

துன்னாலையைச் சேர்ந்த சாரதியான கணேசமூர்த்தி பார்த்தீபன் (வயது 23), கரவெட்டி வடக்கைச் சேர்ந்த செல்வநாயகம் கோபிநாத் (வயது 23) ஆகியோர் இவ்விபத்தில் பலியான அதேவேளை, அல்வாய் தெற்கைச் சேர்ந்த அம்பிகைபாலன் செந்தூரன் (வயது 23) படுகாயமடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பலியானவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.