வடபகுதியில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் பாரிய வறட்சியினை அண்மைக் காலங்களில் எதிர்நோக்கியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு உடன் தீர்வு காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் யாழ்ப்பாணத்தில் 15 பிரதேச செயலகங்களிலும் கிளிநொச்சியில் 4 பிரதேச செயலகங்களிலும் வாழும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் உடனடியாகக் குடிநீருக்கான தேவை எழுந்துள்ளது எனவும் யாழ்ப்பாணத்திற்குத் தொலைவிலுள்ள தீவுகளில் கிணறுகள் வற்றி வருகின்ற அதேவேளை, சிலவற்றில் உப்புத் தன்மை அதிகமாகக் காணப்படுவதோடு நீர்ப்பற்றாக்குறை ஏற்கனவே நிலவியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி வடபகுதி வறட்சிக்கு தீர்வு காணும் பொருட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி அரச அதிபர்கள், பிரதேச செயலர்கள், பிரதேச சபை செயலாளர்கள், மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அமைப்புகளைச் சேர்ந்த செயலாளர்கள் அக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகர் ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்கு பௌசர்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுவது குறித்து அக் கலந்துரையாடல்களின் போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அப் பிரதேசத்தை அண்டிய இடங்களிலும் குடிநீரற்ற நிலையில் தூர இடங்களிலிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுவதனால் செலவு அதிகமாக காணப்படுகிறது. கிளிநொச்சியிலும் இதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும், தற்போதுள்ள நிலமை காரணத்தினால் யாழ்ப்பாணத்தில் நல்லூர், சங்கானை, சண்டிலிப்பாய், கரவெட்டி மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களிலும் கிளிநொச்சியில் மேலதிக குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டியிருக்கும் என்ற விடயம் அக் கலந்துரையாடல்களின் போது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
இதேவேளை இப்பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் தமக்கு பௌசர்களும் நீர்த்தாங்கிகள் பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் , பௌசர்கள் மற்றும் நீர்த்தாங்கிகள், வழங்குவதற்கான அனுமதி தருமாறு அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்தததோடு அமைச்சரவைப் பத்திரமாகவும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் வடபகுதியில் நிலவும் வறட்சிக்கு உடனடித் தீர்வு காணும் முயற்சியில் அமைச்சர் ஈடுபட்டுள்ளார்.