வடபகுதியில் பெளத்தத்தை பரப்ப முயல்வது மா தவறு; விஜித்த ஹேரத் எம்.பி. குற்றச்சாட்டு

JVP-vijitha-harathதென்னிலங்கையிலிருந்து மக்களை கொண்டுசென்று வடக்கில் குடியேற்றுவது மா தவறு. அதனைவிட மீள்குடியேற்றப் பகுதிகளில் பௌத்த கலாசாரத்தைப் பரப்ப முயல்வதும் மா தவறு என்று ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கில் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்புத் தொடர்பான ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:

வடக்கு இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. அதற்கெதிராக நாம் குரல்கொடுத்து வரும் நிலையில் அந்த இராணுவ நிர்வாகம் தற்போது வெலிவேரிய வரைக்கும் வந்து விட்டது. நாடு முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவ நிர்வாகம் இடம்பெற்று வரும் நிலையில் அங்குள்ள மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து கொண்டு செல்லப்படும் மக்கள் குடியேற்றப்படுகின்றார்கள்.இதனை நாம் கடுமையான எதிர்க்கின்றோம்.

இது மா தவறான செயல். அத்துடன், மீள்குடியேற்றப் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த கலாசாரத்தைப் பரப்பும் செயற்பாடுகள் அதைவிட மா தவறானது.

பௌத்தத்தை எவர் மீதும் திணிக்குமாறு புத்தர் கூறவில்லை. எனவே, பௌத்தத்தை ஏனைய மக்கள் மீது திணிக்கப்படுவதை உண்மையான பௌத்தர்கள் என்ற வகையில் நான் கடுமையான எதிர்க்கிறேன் என்றார்.