வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

Kajatheepan-tna

நேற்று காலை 11.30 மணியளவில் யாழ். ஏழாலைப்பகுதியில் அமைந்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் வீட்டுக்குச்சென்ற சீருடை அணிந்த இராணுவத்தினர் மாகாணசபை உறுப்பினரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வசாவிளான் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பண்டார என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அதிகாரியுடன் மேலும் 03 சீருடை அணிந்த இராணுவத்தினர் அவரது தந்தையிடம், உங்கள் மகன் எங்கே ? அவரை நாங்கள் விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர்.

பின்னர் உறுப்பினரை விசாரணை செய்த அவர்கள் உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? மனைவி யார்? குழந்தைகள் உள்ளனரா? எத்தனை பேர்? என தேவையற்ற பல வினாக்களை எழுப்பியிருந்தனர்.

இவ்வாறு தன்னைப்பற்றியும், குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் தனது அரசியல் நடவடிக்கைகள் பற்றியுமே கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள சமூக சூழ்நிலையில் தன்னைப்பற்றி இராணுவத்தினர் சகல தகவல்களையும் அறிந்துள்ள போதிலும் விசாரணைக்கான காரணத்தைக்கோரியபோது தாம் மேலிட உத்தரவின் பிரகாரமே விசாரணைகளில் ஈடுபடுவதாக குறித்த அதிகாரி தெரிவித்ததாக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.