வடக்கு மாகாணசபைக்கு போதிய நிதி இல்லை: முதல்வர்

இலங்கையின் வடமாகாண சபையின் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதிய நிதியை அரசாங்கம் இன்னும் முழுமையாக வழங்காதுள்ளபடியால் சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் பிரச்சனைகள் உள்ளதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Vick

வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட விசேட நிதியிலிருந்து 22 மிலியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா வைத்தியசாலை மருத்துவ நிபுணர்களுக்கான விடுதி கட்டடத்தை அவர் நேற்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

அத்துடன் மிகவும் பின்தங்கிய பிரதேசமான ஓமந்தை பாமோட்டை நவ்வி பகுதியிலும், முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை பகுதியிலும் இரண்டு கிராமிய வைத்தியசாலைகளை அமைப்பதற்கான அடிக்கற்களையும் அவர் நாட்டி வைத்தார்.

வடமாகாண சபைக்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கப்படுவதாக அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்ற போதிலும், ‘கூறப்படுகின்ற நிதியில் சிறிய தொகையையே எங்களுக்கு வழங்குகின்றது. மிகுதி நிதியை அவர்கள் செலவு செய்கின்றார்கள்’ என்றார் முதலமைச்சர்.

‘அதனை எதற்கு, எப்படி செலவு செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை. இந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டதாகும். இனிமேலாவது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடன் இணைந்து அரசாங்கம் மக்களுக்காகச் செயற்பட முன்வரவேண்டும்’ என்றும் கூறினார் விக்னேஸ்வரன்.

இந்த வைபவங்களில் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிதிப்பற்றாக்குறை, ஆளணி பற்றாக்குறை, உட்கட்டுமாண வசதிப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் பொதுமக்களுக்கான வைத்திய சேவைகள் பலவற்றைத் தாங்கள் மேற்கொண்டு வருவதாக இந்த வைபவத்தில் உரையாற்றிய மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor