வடக்கு மக்கள் சுதந்திரமாக உள்ளனர்: இந்தியாவில் பிரதமர் ரணில்

வட பகுதி மக்கள் தற்போது சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும் யாழ்ப்பாணத்திற்கு நேரில் வந்து பார்த்தால் இதனை அறியலாம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில், நேற்று (புதன்கிழமை) டெல்லியில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்புக்களை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போது, யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறுள்ளதென ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”யுத்தத்தின் பின்னர் வடபகுதி மக்கள் சுதந்திரத்தை உணர்கின்றனர். அதுவே முக்கியமான விடயமாகும். யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அத்தோடு, மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யுத்தம் காரணமாக வடக்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை மீளக் கட்டியெழுப்புவதும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்ப்பதும் அவசியமாகின்றது. இதுகுறித்து வடக்கின் முதலமைச்சர் மற்றும் ஏனைய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

நீண்டகால யுத்தத்தால் சிதைவடைந்துள்ள சமூக கட்டமைப்பை சீரமைப்பதற்கு இன்னும் காலம் தேவை. அத்தோடு, யுத்தத்தால் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கம் இவ்விடயங்களில் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது” என்றார்.

Recommended For You

About the Author: Editor