வடக்கு மக்களின் மகஜர்களை ஐ.நா.வில் கையளிக்க முடியாதென்கிறார் மஹிந்த!

ஐ.நா. செல்லும் வடக்கு ஆளுநர், வடக்கு மக்களின் மகஜர்களை அங்கு முன்வைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டது. அவ்வாறு கையளிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒன்றும் தபால் நிலையம் அல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இலங்கை சார்பில் விளக்கமளிப்பதற்காக குழு ஒன்று ஐ.நா செல்லவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் தலைமையில் செல்லவுள்ள அந்த குழுவில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். இதுதொடர்பாக நேற்று மாலை நாங்கள் ஜனாதிபதி தலைமையில் கூடி ஆராய்ந்திருந்தோம்.

இதன்போது, நான் இம்முறை இந்த குழுவுடன் இணைந்து செல்லவில்லையென ஜனாதிபதியிடம் கூறினேன். கடந்த 10 ஆண்டுகளாக அங்கு சென்று வருகின்றேன். இதன்காரணமாகவே இம்முறை செல்லவில்லை.

அத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் ஒரு செய்தியினைப் பார்த்தேன். அந்த செய்தியில் வடக்கு மக்கள் சார்பாக அவர்களினால் கையளிக்கப்படவுள்ள மகஜர்களை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஐ.நாவில் சென்று கையளிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

வடக்கு ஆளுநரினால் இவ்வாறு ஒன்றும் செய்ய முடியாது. ஐ.நா ஒன்றும் தபால் நிலையம் அல்ல. இதனை புரிந்து கொள்ள வேண்டும்“ என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts