வடக்கு காணி சுவீகரிப்புக்கு எதிராக செயற்பட சட்டத்தரணிகள் சங்கம் தயார்

BAR-Associationவடக்கில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இவ் விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு தேவைகளுக்காக வடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கபப்படுவதன் காரணமாக அம் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வட மாகாண சபை தேர்தல் தற்போதுள்ள அரசாங்கத்திற்கு சாதகமானதாகவே அமையும் என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக காணி சுவீகரிப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இதுவரையில் வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ள பிரதேசங்கள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் இராணுவ தேவைகளுக்காக மக்களின் காணிகள் தற்போதும் சுவீகரிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor