வடக்கு கிழக்கு மக்களுக்கும் பாரிய நன்மையினை ஈட்டித் தரத்தக்கதான மொரகஹகந்த – களுகங்கை நீர் விநியோகத் திட்டமானது எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அந்த வகையில், இத் திட்டத்தை தனது மிக முக்கியக் கனவாகக் கொண்டு, அதனை நனவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி,)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த 25ம் திகதி மேற்படி திட்டத்திற்கான புதையல் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோது தனது நன்றியை நேரில் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள்,
இத் திட்டம் இலங்கையில் பாரியதொரு நீர் விநியோகத் திட்டமாகும், இதன் மூலம் சுமார் 9 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் பெருந்தொகையானோர் பயனடையவுள்ளனர். பல்லாயிரக்கான எக்கர் நிலங்களில் பயிர்ச் செய்கையினை மேற்கொள்வதற்கான நீரையும், குடி நீரையும் பெற முடியும். குறிப்பாக குடி நீர் காரணமாக தற்போது சிறு நீரக நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடமேல் மாகாண மக்களுக்கு இத் திட்டம் மிகவும் பெறுமதி வாய்ந்தது.
அதே நேரம், இத் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களும், கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களும் குறிப்பிட்டளவு பயனடையக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் குடி நீர் மற்றும் விவசாயச் செய்கைக்கான நீர் விநியோகத் திட்டங்கள் தொடர்பில் நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இத் திட்டமானது ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. அந்த வகையில் இத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எம்மால் மேலும் பல நீர் விநியோகத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும்.
வடக்கு மாகாணத்திலுள்ள நீர் நிலைகளிலுள்ள நீரை அந்த மாகாணத்திற்குள்ளேயே பகிர்ந்து கொண்டு எமது மக்களின் தாகம் தீர்க்க எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எமது மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள் முட்டுக்கட்டைகளை இடுகின்ற நிலையில், மொரகஹகந்த – களுகங்கை திட்டமானது எமது மக்களுக்கு பாரியதொரு வரப்பிரசாதமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.