Ad Widget

வடக்கில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் :அமெரிக்க குழுவிடம் முதலமைச்சர் தெரிவிப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

vick-amerecca

சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண பெண்கள் மற்றும் விதவைப் பெண்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொண்டதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.

இதன்போது அமெரிக்க அதிகாரிகளிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது,

வடமாகாணத்தில் சுமார் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட விதவைகள் இருப்பதுடன், அவர்களில் 25 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.

சமூதாயத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டால், அது வரும் காலத்தில் நன்மைகளைப் பயக்காது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய அரசாங்கம் நினைத்ததைக் கொண்டு வந்து எமது மக்களுக்கு திணித்து, இது தான் நல்லிணக்கம் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவதில் எந்த பயனுமில்லை.

உண்மைகளை அறிந்து, மக்களுக்கு என்னசெய்ய வேண்டு மென்று அறிந்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல், மிக நன்மைகள் பயக்கும் கலந்துரையாடலாக அமைந்துள்ளதென்று வடமாகாண முதலமைச்சர் மேலும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Related Posts