வடக்கில் 11 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா – 164 உயிரிழப்புகள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 800 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றினால் 164 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கில் கொரோனாத் தொற்று நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கொவிட்-19 நிலவரம் என்பது கடந்த ஜனவரி மாதம் முதல் தொற்று படிப்படியாக ஆரம்பித்து ஜூன் மாதத்தில் 3594 என அதிகூடிய தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனம்காணப்பட்டனர்.

அதற்குப் பின்னர் ஜூலை மாதத்தில் அந்தப் பரம்பல் குறைவடைந்து தற்போது வரை 2241 தொற்றாளர்கள் வடமாகாணத்தில் இனங்காணப்பட்டனர்.

அவற்றில் யாழ்ப்பாணத்தில் 1549 பேரும் வவுனியாவில் 176 பேரும் மன்னாரில் 168 பேரும் கிளிநொச்சியில் 220 பேரும் முல்லைத்தீவில் 128 பேரும் தொற்றாளாராக இனங்காணப்பட்டனர்.

இதுவரை காலமும் கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து தற்போதுவரை வட மாகாணத்தில் 11800 பேர் தொற்றுக்குள்ளாயினர்.

அதில் யாழ்ப்பாணத்தில் 7025 பேரும் வவுனியாவில் 1607 பேரும் மன்னாரில் 977பேரும் கிளிநொச்சியில் 1215 பேரும் முல்லைத்தீவில் 876 பேரும் தொற்றாளாராக இனங்காணப்பட்டனர்.

இதுவரை காலமும் கொரோனாவினால் தற்போதுவரை வட மாகாணத்தில்
164 பேர் உயிரிழந்தனர்.

அதில் யாழ்ப்பாணத்தில் 122பேரும் வவுனியாவில் 23 பேரும் மன்னாரில் 8பேரும் கிளிநொச்சியில் 4 பேரும் முல்லைத்தீவில் 7 பேரும் உயிரிழந்தனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor