வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் முதலமைச்சரின் கருத்து பெறப்பட்டு அதற்கிணங்கவே இடம்பெறுவதாக, மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சாலைகளுக்கான பேருந்து வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை(15) யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னைய அரசின் போது வடக்கில் இருந்த மத்திய அமைச்சர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கியே வட மாகாணத்தில் ஆட்சி அமைப்பு இருந்தது.
அவர்களின் கூற்றுக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. ஆட்சி மாற்றம் வந்துள்ளது. அதற்கேற்றவகையில் வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, அதனை நான் மத்திய அமைச்சரிடம் தெரிவித்து அதற்கேற்ற நடைமுறைகள் வடக்கில் செய்யப்படுகின்றது. எமக்கு தந்த அதிகாரங்களை நாம் தனிப்பட்டு செலுத்தவில்லை செலுத்தவும் மாட்டோம்.
சென்ற அரசாங்கத்தில் பலர் ஒரு தலைப்பட்சமாக செயற்பட்டுள்ளனர். பல பேருந்துகள் வழங்கப்பட்டும் பணியாளர்கள் பணியமர்த்தபட்ட போதும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பை சார்ந்த மக்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தற்போதைய அரசின் 100 நாள் திட்டத்தில் கவனத்தில் எடுக்கப்படவேண்டும். இதனை மத்திய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். பேருந்து சேவைகளில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும். எந்த ஒரு சிபாரிசுகளும் இன்றி தகமைக்கேற்ற பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சி பேருந்து நிலையம் இன்னமும் அமைக்கப்படாமை தொடர்பில் தெரிவித்திருந்தார். இப்பிரச்சினையை நான் மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியில் தற்போது பிரதேச சபை அமைந்துள்ளதாக அறிந்தேன்.
இப்பிரதேச சபையை, கிளிநொச்சி பழைய கச்சேரி கட்டடத்துக்கு மாற்றம் செய்து பேருந்து நிலைய காணியினை பெற்று பேருந்து நிலையத்துக்கான அத்திவாரத்தை இந்த 100 வேலைத்திட்டத்தில் அமைத்து தரும்படி மத்திய அமைச்சரிடம் கோரியுள்ளேன். அதனை கவனத்தில் எடுத்து அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.