வடக்கில் புதிய மாற்றணி தயாராகிறது. நீதியரசர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற தேர்தலில் குதிக்கிறார்.ரெலோவும் இணைகிறது?

நடைபெற்று முடிந்த சனாதிபதித்தேர்தலை அடுத்து வரவுள்ள பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாற்றணி அரசியல் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டணி முயற்சிகள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இணைவில் ஏற்பட்ட முரண்பாடுகளுடன் அமைதியாகியிருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற சனாதிபதித்தேர்தலில் அனைவரது கவனமும் குவிந்திருநதது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரித்திருந்த நிலையில் வடக்கு கிழக்கு மக்களும் கோத்தபாயவை ஒட்டுமொத்தமாக எதிர்த்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிருந்தார்  புதிய அரசு அவர் தலைமையில் உருவாகியுள்ள நிலையில் மீண்டும் தமிழ்த்தேசிய அரசியல் சூடு பிடித்திருக்கிறது

தமிழ் மக்கள் கூட்டணி தரப்பில் இருந்து இன்று கசிந்துள்ள தகவல்களின்படி முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் தலைமையில் மாற்றணி அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அவரும் குதிக்கவுள்ளார் என அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன . அத்துடன் தமிழ்மக்கள் கூட்டணி , சுயாட்சிக்கழகம் , தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் , ஈபி ஆர் எல் எப் ஆகியன அந்த அணியில் ஒன்று சேர உள்ளதாக தெரிய வருகின்றது. முழுமையாக ரெலோ இணைவதற்குரிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுகின்றது.  தவறும் பட்சத்தில் ரெலோவின் யாழ் மாவட்ட கிளை சிறிகாந்தா தலைமையில் பிரிந்து  இணைவதற்கு பேச்சுவார்தைகள் நடைபெறுவதாக அறிய வருகிறது. தமிழர் விடுதலைக்கூட்டணிக்கட்சியில் சங்கரிக்கு வாய்ப்பு வழங்காமல் இணைப்பதற்கு பேச்சு இடம்பெறுகின்ற போதிலும் ஆனந்த சங்கரி அடம் பிடிப்பதாகவும் அறிய வருகிறது.

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்  கடந்த காலத்தில் தொழிற்பட்ட காரணத்தினால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ந்து பேசுவதில் விக்கினேஸ்வரன் ஆர்வம் காட்ட விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது.இருந்த பொழுதிலும் முற்றாக அந்த முயற்சிகள் கைவிடப்படவில்லை எனவும் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தன.

இந்நிலையில் இம்முறை தமிழர் தரப்பில் முன்று அணிகள் பாராளுமன்றில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.