Ad Widget

வடக்கில் இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றுவது சாத்தியமில்லை; முன்னாள் இராணுவத் தளபதி

தவறான அரசியல் கலாசாரத்தைக் கொண்டிருக்கும் இந்த நாட்டினை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதற்கு எனது உயிரைத் தியாகம் செய்தாவது அந்தக் கடமையை நான் நிறைவேற்றுவேனே தவிர அரசாங்கத்துடன் நான் இணையமாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் சிறையில் இருந்து விடுதலையாகிய இவர் இன்று நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,தற்போதைய ஊழல் ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாப்பேன். எனது உயிரைக் கொடுத்தாவது நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.

உங்களில் பலர் என்னிடம் கேட்க விரும்பும் கேள்வி இது. நான் ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையமாட்டேன். நான் ஆதரிக்கும் கொள்கைகளுக்காக எப்போதும் போராடுவேன். தற்போதைய ஊழல் ஆட்சியை அகற்றி நாட்டை பாதுகாப்பேன்.

இந்நாட்டு மக்கள் மத்தியில் தான் மீண்டும் அரசியல் ஸ்திரத்தை பெறுவதை தடுப்பதற்காகவே, நான் அரசாங்கத்துடன் இணையப்போவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் எந்தவித உண்மையும் இல்லை.

முன்னரை விட உத்வேகத்துடன் எனது அரசியல் பயணத்தைத் தொடரத் தயாராக இருக்கிறேன். இந்த நாடு தற்போது தவறான அரசியல் கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு.

யுத்தத்தின் பின்னர் இதுவரையான காலத்தில் தமிழ் மக்களுடைய தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. பாடசாலைகள் இல்லை. மர நிழலில் கல்வி கற்க வேண்டிய நிலை. வைத்தியசாலைகள் வெகுதூரத்திலுள்ள கட்டிடங்களில் இயங்கவேண்டிய நிலை மற்றும் தொழில் செய்வதற்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவுக்கு வரும் வகையில் திட்ட வரைவொன்றைச் சமர்ப்பித்தேன். கூட்டுப்படைகளின் பிரதானி என்ற வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை எனக்கு இருந்தது.

அந்த வகையில் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம், உட்கட்டுமானம் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமொன்றைச் சமர்ப்பித்தேன். அதனைக் கையளித்தபோது ஆட்சியாளர்கள் குழப்பமடைந்தார்கள். எனினும் இதுவரை மக்களுடைய தேவைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல், இந்நாட்டு மக்களுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க அரசியல் தீர்வு காணுதல்,
அத்துடன், ஊழல் நிரம்பிய  ஆட்சிக்கு எதிராக நான் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளேன் அதில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகியோரும் இணைந்து கொள்ளவேண்டும்.

அதேவேளை, முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதால் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது சாத்தியப்படாத விடயம். அவ்வாறு இராணுவ முகாம்களை அகற்றினால் அது குற்றம் புரிய எண்ணியுள்ளவர்களை ஊக்குவிப்பதாகவே அமையும்.

இருப்பினும் படிப்படியாகவே வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவருடைய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிற்கு பெருமளவிலான உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts