வடக்கில் இராணுவக் குறைப்பிற்கு கால வரையறை வேண்டும் – முதலமைச்சர்

வடக்கில், இராணுவ வீரர்களின் தொகையினைக் குறைத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பது ஆகியவற்றிற்கு கால வரையறையை நிர்ணயிக்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்தார்.

vickneswaran-viki-tellippalai

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் இந்த கோரிக்கையினை விடுத்தார்.

‘வடக்கு – தெற்கின் இணைப்பிற்கு பாலமாக ‘கலர்ஸ் ஒப் கரேச்’ நிறுவனத்தின் இரு இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தினை மனதிற் கொண்டு வடமாகாண மக்களிற்கு சேவை செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்கள் முன்மாதிரியான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

போரால் தமிழ் குடும்பங்கள் மட்டுமன்றி சிங்களக் குடும்பங்களும் சொல்ல முடியாத துயரத்தினை அனுபவித்துள்ளார்கள். போரால் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைய நிகழ்விற்கு ஜனாதிபதியை அழைத்திருப்பது சாலப் பொருத்தமாக அமைந்திருக்கும்.

எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.

அதில், வன்முறையை விலகி முன்னேற்றல், நாட்டினை பிரிக்காது முன்னேற்றல், சமஷ்டி முறையை அனுசரித்து முன்னேறல் போன்ற தேர்தல் கொள்கையை வடமாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அந்தவகையில், வடமாகாண மக்களின் மனநிலையை ஜனாதிபதி புரிந்து கொண்டிருப்பார். என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவே வன்முறைகளைக் களைந்து நாட்டினை பிரிவின்மைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக இணைந்து வாழ்க்கையை நடத்த வந்துள்ள எம்மக்களின் மனோநிலையை இங்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம்.

எமது தேவைகளைப் புரிந்து இனக்கூற்றுக்கு வித்திடுவார் என்பதுடன், புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்றும் எதிர்பார்க்கலாம்.

புற்றுநோய்க்கு ஆளானவர்கள் எவருடைய உதவிகளுமற்ற பரிதாப நிலைக்கு ஆளாகின்றார்கள். தம்மை தாமே பராமரித்துக் கொள்ள முடியாத நிலையை அடைகின்றனர். இதனால் மனிதாபிமானமும், சுயகௌரவமும் இழக்கப்படுகின்றது. அவ்வாறு சுயகௌரவம் இழக்கப்படும் போதும் மனித அந்தஸ்து குறைக்கப்பட்டு மனிதத்தின் அத்திவாரம் ஆட்டங்காணத் தொடங்குகின்றது.

வடமாகாண மக்களின் சுயகௌரவம் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக இங்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன். ஏனெனில் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்ற ரீதியிலும் நாட்டில் ஆணை பிறப்பிக்கும் சேனைத் தலைவர் என்ற ரீதியிலும் வடமாகாணத்தில் வாழும் மக்களின் சுயகௌரவத்தினை பாதிக்கும் வகையிலே இங்கு வாழும் இராணுவப் பிரசன்னம் நோக்கப்படுகின்றது.

பொருளாதார விருத்திக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதையும், பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும், வட மாகாண மக்களின் உள்ளார்ந்த சுயகௌரவமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஏனெனில், இங்கு வாழும் பெரும்பான்மை இராணுவத்தினர் உள்ளூர் வாசிகளின் மொழியை பேசுவதில்லை. அத்துடன் மக்களின் மனம் தழுவியவர்களும் இல்லை. கலாசாரத்தில் ஊறியவர்களும் அல்ல. அவர்களின் ஊர்களை சேர்ந்தவர்களும் அல்ல. இங்கு இருக்கும் மக்களின் தொகைக்கு ஈடான தொகையில் இராணுவத்தினரின் தொகை இருக்கின்றது. நாட்டில் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை.

ஆனால், வடபகுதி மக்களின் நல உரித்துக்கள், பாதுகாப்பு, சுயகௌரவம் ஆகியவற்றை கருத்திற் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன். எமது எதிர்பார்ப்பிற்கு முரண்பட்டதாக அமைய வேண்டும் என்பதல்ல. இரண்டுமே பேணப்பட வேண்டும் என்பதை எனது மக்கள் சார்பாக உங்களிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன். போர் வீரர்கள் தொகையில் குறைப்பு ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையில் இராணுவ உள்ளீர்ப்பை குறைப்பதற்கான கால வரையறை நிர்ணயிக்க வேண்டும்.

எமது மக்கள் உறுதியான மனம் உடையவர்கள். எச்சந்தர்ப்பத்திலும், மக்களின் தேவைகளை வழங்கி முன்னேற வழி வகுப்பது எமது எல்லோரினதும் கடமையாகும்.

சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும், இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த விடயங்களை ஆவண செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.