Ad Widget

வடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள் – சாந்தி சச்சிதானந்தம்

shanthi -satchchethanகடந்தவாரம் யாழ்ப்பாணம் குருநகரில் 22 வயதான ஜெயரோமி கொன்சலிற்றா என்னும் இளம்பெண் அவ்வாட்டாரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கின்றது.

இதே போன்று யாழ் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்குள் பல யுவதிகள் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்டெடுக்கப் பட்டிருக்கின்றனர். சமீபத்தில் பல்கலைக்கழக மாணவியொருவரும் இறந்தள்ளார்.

இந்த சம்பவங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக காதல் விவகாரத்தில் எற்பட்ட தகராறுகளே காரணம் என்றே கூறப்படுகின்றது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பெண்கள் கொலை செய்யப்படுவது போதாதென்று, பெண்கள் தாமே தம் உயிரை மாய்த்துக் கொள்வது மிகவும் கவலைக்குரிய இன்னுமொரு வகை சமூகப் பிரச்சினையாகும். யாழ் மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகங்கள் வாழும் பிரதேசங்கள் அனைத்திலுமே இப்படியான சம்பவங்கள் இனிமேலும் நடக்காவண்ணம் காத்திரமான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும். இவற்றை செயற்படுத்துவதற்கு இச்சம்பவங்களுக்கான மூல காரணங்கள் அறியப்படவேண்டும்.

எமது சமூகத்தில் பாலியல், காதல் ஆகியன தகாத வார்த்தைப் பிரயோகங்களாக கருதப்படுகின்றன. ஒரு மனிதனின் உடலுக்கு உணவு எவ்வகையான தேவையோ அதே போலவே பாலியலும் ஒரு தேவையாகும். அதுவும் வளரும் பருவத்தில் மற்றும் இளம் பருவத்தில் இந்த இரண்டு விடயங்களும் அதிகமாகவே தேவைப்படுகின்றன. இது மனித குலம் வாழவும் தன்னை இனப் பெருக்கவும் இயற்கை வகுத்த நியதியாகும். இயற்கையின் நியதியை நிராகரிக்கும் செயலே நாம் பாலியல் தொடர்பாகக் கொண்டுள்ள விழுமியங்களாகும். ஒழுக்கத்தைப் பேணுகின்றோம் என்கின்ற பெயரில் எமது இளம் சந்ததியினர் மீது பாலியல் அடக்குமுறையையே பிரயோகிக்க விழைகின்றோம். ஆண்களையும் பெண்களையும் சுதந்திரமாகப் பழக அனுமதிப்பதில்லை. பாலியல் பற்றிய அறிவினைப் பெற்றார் தாமும் போதிப்பதில்லை, பாடசாலைகளிலும் போதிக்க விடுவதில்லை. இதனால் பிள்ளைகள் வேறு என்ன செய்வது? களவாகப் பாலியலைப் பற்றி அறிந்த கொள்வதும் இரகசியமாகக் காதல் விவகாரங்களில் ஈடுபடுவதுமாக தமது பெற்றாருக்கு நேர்மையற்ற முறையில் நடக்கத் தலைப்படுகின்றனர்.

எமது சமூகத்து இளைஞர்களுடன் பணி செய்யும்போதுதான் அவாகளது சிந்தனை முழுக்க பாலியல் விடயங்களினால் எவ்வளவு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது எனப் புரியும். அவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகி வாழ்கின்றனர். யாராவதொரு பெண் ஓர் ஆணுடன் கொஞ்சம் கூடப் பழகினால் போதும். அது பெரிய கதையாகி விடும். அது மட்டுமா. கையடக்கத் தொலைபேசிகளில் மூலம் பெண்களைப் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கப்படுவது, முகப்புத்தகத்தில் பெண்களையும் ஆண்களையும் தொடர்புபடுத்தி ஆபாசமான கருத்துக்களைப் போட்டு பெண்களை இழிவுபடுத்துவது போன்றவையெல்லாம் சகஜமாக நடப்பன. உலகமே முகப் புத்தகத்தினை உபயோகித்து புரட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்க, இங்கு பார்த்தால் நாமோ இன்னமும் இந்த சில்லறை விஷயங்களிலிருந்து விடுபடாதவர்களாக உழன்று கொண்டிருக்கின்றோம்.

இவ்வளவு கட்டுப்பாட்டுடன் நாம் வாழ்ந்தும் கடைசியாகக் கண்ட மிச்சம் என்ன? ஒரு முதிர்ச்சியற்ற சமூகத்தைத்தான் வளர்த்து விட்டிருக்கின்றோம். இளைஞர்களையும் யுவதிகளையும் சுதந்திரமாக ஒன்றாகப் பழக விடுவது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். எது சர்வசாதாரணமானதொரு விடயமாக ஆக்கப்படுகின்றதோ அதற்குப் பிறகு அது ஒருவரது சிந்தனையையும் ஆக்கிரமிக்காது, பிள்ளைகள் பெரியவர்களுக்கு உண்மை சொல்லி நேர்மையாக நடப்பர். இதற்கு அடிப்படையாகக் கட்டாயமாக அவர்களுக்குப் பாலியல் கல்வி ஊட்டப்படவேண்டும். இப்போதெல்லாம் மேற்கு நாடுகளில் பிள்ளைகளுக்கு ஏழு வயதாகும்போதே, அதாவது ‘தம்பிப் பாப்பா எப்பிடி அம்மாவின்ட வயிற்றில வந்தான்?’ என அவர்கள் கேள்வி கேட்கும் காலந்தொடங்கியே பாலியல் கல்வி பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படுகின்றது. இது உயர்தரம் வரையில் நீடிக்கும். இதனுடன் சேர்த்து, பெண்களை மரியாதை செய்ய வேண்டிய அவசியம், பெண்களும் ஆண்களும் பழகும்போது அனுசரிக்க வேண்டிய வழக்கங்கள் என சில ஒழுக்கக் கோட்பாடுகளையும் நாம் சேர்த்துக்கொள்ளலாமே. குடும்பங்களில் பெற்றோர்களினதும் பெரியவர்களினதும் தமது சிறியவர்களை நோக்கிய அணுகுமுறையும் ஆரோக்கியமாக இருப்பதில்லை. அனேகமான குடும்பங்களில் பெற்றோரும் பிள்ளைகளும் பேசிக்கொள்வதேயில்லை.

‘இதைச் செய், போய்ப்படி, சாப்பிடு’ என்று கட்டளையிடுவது அல்லது ‘ நல்லாப் படித்தால் முன்னுக்கு வரலாம்’ எனப் போதிப்பது போன்ற வசனங்களே பெற்றாருக்கும் பிள்ளைகளுக்குமிடையேயான ஒரே தொடாபாடலாக இருக்கக் காணலாம். ஆறுதலாக அவர்களுடன் அமர்ந்து அன்று பாடசாலையில் நடந்த விடயங்களைப் பற்றியோ அல்லது அவர்களது நண்பர்கள் பற்றியோ அல்லது நாட்டு நடப்புக்கள் பற்றியோ அளவளாவும் பெற்றோர் மிக அரிதாகும். எங்கும் தமது அதிகாரத்தை நிலைநாட்டவே பெற்றோர்கள், குறிப்பாகத் தந்தையர், விரும்புகின்றனர். ஆனால் பிள்ளைகளைத் தமது நண்பர்களாக சரிசமமாகப் பழக விடுவதால் ஏற்படும் அளப்பரிய நன்மைகளை உணரமாட்டார்கள். பிள்ளைகளுக்கு ஆலோசனை சொல்வதுபோல அவர்களிடமிருந்தும் ஆலோசனை கேட்பது, தமது மனத்திலுள்ள சந்தேகங்கள் பயங்களை அவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுவது இவையெல்லாம் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு மிடையிலான உறவினை ஆழமாக்கும். தமக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுவதால்தான் பிள்ளைகளது மரியாதையைப் பெற்றுக் கொள்ளலாம் என்னும் தப்பபிப்பிராயத்தில் அவர்கள் இருக்கின்றனர். தமது பெற்றோருக்கு எல்லாம் தெரியாது என பிள்ளைகள் உணரும் காலம் வரும்போது அவர்கள் மனதில் ஆத்திரம்தான் மிஞ்சும்.

மாறாக, தாம் விட்ட தவறுகளை ஒத்துக்கொண்டு தமது பலவீனங்களையும் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதனாலேயே அவர்களது அளவற்ற மரியாதையையும் அன்பையும் பெற்றோர்கள் பெற்றுக்கொள்ளலாம். சுருங்கக் கூறில், ஒரு 13 வயதுப் பிள்ளை ‘அப்பா எனக்கு ஒருவன் காதல் கடிதம் போட்டிருக்கின்றான்’ என்று தனது தந்தையிடமே சொல்லுகின்ற அளவுக்கு ஒரு குடும்பத்தில் நேர்மையான உறவு மலரவேண்டும். தமது பிள்ளைகள் தமக்கு உண்மை சொல்லுகின்றதை விரும்பாத பெற்றோரும் உண்டோ? ஆனால் அந்த நிலைமை உருவாவதற்கு அவர்கள் பக்கமிருந்து நிரம்ப உழைப்புத் தேவையாக இருக்கின்றது. குறிப்பிட்ட ஜெயரோமி கொன்சலிற்றாவுக்கும் மனந்திறந்து பேசுவதற்கு தனது குடும்பத்தில் இடமிருந்திருந்தால் அவள் நிச்சயமாக அந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டாள். அடுத்ததாக, பிள்ளைகளுக்கு சுயமரியாதையை ஊட்டி வளர்க்க வேண்டியது அவசியமாகும்.

ஒவ்வொரு பிள்ளையும் தன்னால் தன்னுடைய குடும்பத்துக்கும் நாட்டுக்கும் நன்மை கிடைக்கின்றது என்கின்ற உண்மையை உணர வைக்க வேண்டும். தமது சிந்தனைத் திறனிலும் ஆற்றலிலும் நம்பிக்கை கொண்டவர்களாக அவர்கள் வளர்க்கப்படவேண்டும். தமது இன அடையாளம் பற்றிய பெருமையுடன் வாழ்பவர்களாக, தமது கலாசாரத்தின் அனுகூலங்கள் பிரதிகூலங்கள் பற்றிய புரிதல் உடையவர்களாக மாற்றப்படவேண்டும். அவர்களது ஒவ்வொரு நல்ல நடவடிக்கையினையும் உரிய முறையில் பாராட்டுதல், ஏனையோருக்கு முன்பாக அவர்களை விமர்சனத்துக்குள்ளாக்குவதனைத் தவிர்த்தல், முக்கிய பொறுப்புக்களை அவர்களுக்கு கையளித்து அதனை அவர்கள் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைத்தல், அவர்களது இன கலாசார வரலாறுகளை அவர்கள் அறியச் செய்தல் போன்றன பிள்ளைகள் மத்தியில் சுய மரியாதையை வளர்த்து விடும் செயல்களாகும்.

தன்னம்பிக்கையும் தன்னைப் பற்றிய நல்லபிப்பிராயமும் கொண்ட எந்தப் பிள்ளையும் காதலில் பிரச்சினை அல்லது பரீட்சையில் தோல்வி போன்ற சில்லறைக் காரணங்களுக்காகத் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளாது. பிறர் மீது வன்முறையைப் பிரயோகித்து அவர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சிக்காது. இவ்வகையாக, பாலியல் பற்றிய ஆரோக்கிய நோக்கு, பெற்றார் பிள்ளைகளுக்கிடையேயான ஆழமான உறவு, பிள்ளைகள் மத்தியில் வளர்க்கப்படும் சுயமரியாதை ஆகியன இளம் சந்ததியினர் மத்தியில் தற்கொலை முயற்சிகளை இல்லாதொழிக்கும். இதில் விசேடமாக, ஒழுக்கம் குறித்து பெண்களின் மீது சமூகம் எற்படுத்தும் அழுத்தங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த அழுத்தங்கள் தாங்காமலேயே பெண்கள் மத்தியில் தற்கொலைகள் மிக அதிகமாக இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் பெற்றோருக்கான ஆற்றுப்படுத்தலினைச் செய்யக் கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். எமது வைத்திய சாலைகளிலும் மகப்பேற்றுப் பிரிவுகளில் தாய்மாருக்கும் தந்தைமாருக்கும் குழந்தை வளர்ப்பு பற்றிய அடிப்படைகளைப் போதிக்கக்கூடிய பிரிவகள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதனைவிட, ஊடகங்களும் இவ்விடயத்தில் கவனஞ் செலுத்தி சமூகத்தில் இதனைப் பற்றிய விழிப்புணர்வினை எற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எமது பிள்ளை வளர்ப்பினில் நாம் முன்னேற்றம் கொண்டுவரும்போது பெண்கள் மீது வன்முறை பிரயோகிக்காத, சுதந்திரமாக சிந்திக்கக் கூடிய சுயமரியாதையுள்ள நீதியான மனிதர்கள நாம் உருவாக்க முடியும். அது எத்தகைய சாதனை!

அடி என்னடா உலகம், இதில் எத்தனை கலகம்

சாந்தி சச்சிதானந்தம்

ஏனைய கட்டுரைகளுக்கு

Related Posts