Ad Widget

வடக்கில் அதிகரித்துச் செல்லும் மத வழிபாட்டிடங்கள்!!

போருக்குப் பின்னரான கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் புதிதாக 18 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 29 விகாரைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 47ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது என வடக்கு மாகாண புள்ளிவிபரக் கையேட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2009 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 373 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு அது 2 ஆயிரத்து 541ஆக அதிகரித்துள்ளன. 221 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு அது 260ஆக அதிகரித்துள்ளன.

மசூதிகள் 11 ஆக 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் தற்போது 18ஆக அதிகரித்துள்ளன. விகாரைகள் 2009 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 4ஆகவே யாழ் மாவட்டத்தில் காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 300 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014ஆம் ஆண்டு அது 411ஆக அதிகரித்துள்ளன. தேவாலயங்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை 41ஆகவே காணப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு 18 மசூதிகள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அது 20ஆக அதிகரித்துள்ளன. விகாரைகள் 2009 ஆம் ஆண்டு 22 ஆகக் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 23ஆக அதிகரித்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 309 இந்து ஆலயங்கள் 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு 488ஆக அதிகரித்துள்ளன. 2009ஆம் ஆண்டு 81 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 129ஆக அதிகரித்துள்ளன.

2009ஆம் ஆண்டு மசூதிகள் எவையும் காணப்படாத நிலையில் கடந்த ஆண்டு 9 மசூதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று விகாரைகள் எவையும் 2009 ஆம் ஆண்டு காணப்படாத நிலையில் கடந்த ஆண்டு ஓர் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 133 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 229ஆக அதிகரித்துள்ளன. 142 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அது 224ஆக அதிகரித்துள்ளன.

56 மசூதிகள் 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் அது தற்போது 80ஆக அதிகரித்துள்ளன. 3 விகாரைகள் 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் அது தற்போது 8ஆக அதிகரித்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 163 இந்து ஆலயங்கள் இருந்துள்ள நிலையில் தற்போது 399ஆக அது அதிகரித்துள்ளன.

தேவாலயங்கள் 37ஆக 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் 66ஆக அதிகரித்துள்ளன. மசூதிகள் 4 காணப்பட்ட நிலையில் அது கடந்த ஆண்டு 5ஆக அதிகரித்துள்ளன.

2009ஆம் ஆண்டு முல்லைத்தீவில் விகாரைகள் எதுவும் காணப்படாத நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 11ஆக அதிகரித்துள்ளது – என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts