Ad Widget

வடக்கில்தான் ஊடகர்கள் பலர் கொல்லப்பட்டனர்! – பிரதமர் ரணில்

“கடந்த காலத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். வடக்கில்தான் பெரும்பாலான ஊடகர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்.”- இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை, நாடாளுமன்ற விவாதம் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். வடக்கில்தான் பெரும்பாலான ஊடகர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் இருக்கின்றார். நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். இதற்காக அவருக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையின்போது பெரும்பாலானோர் தமது நிறுவனங்களை மூடிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதை வழங்குவதில் சிக்கல் இருக்காது. ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

‘இந்து’ பத்திரிகை நிறுவனம் தமக்கு ஊடக பயிற்சி தொடர்பான கல்வி நிறுவனம் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதில் முயற்சிக்கலாம். பயிற்சிகள் நிமிர்த்தம் ஊடகவியலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்து நாடாளுமன்ற அதிகாரத்தைப் பலப்படுத்துவோம். அதற்கேற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தையும் மேம்படவேண்டும்.

அடுத்த அரசில் 30 அமைச்சர்களும், 40 இராஜாங்க, பிரதி அமைச்சர்களுமே இருப்பார்கள்.

நாடாளுமன்றத்தில் எம்.பிக்ளுக்கு 75 அறைகளே இருக்கின்றன. எஞ்சியுள்ள 150 எம்.பிகளுக்கும் அலுவலகங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்.

தொகுதிவாரி தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டால் தொகுதிக்கொரு அலுவலகம் இருக்கவேண்டும். அமெரிக்கா உட்பட வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த வசதிகள் இருக்கின்றன” – என்றார்.

Related Posts