வடக்கின் கல்வியை சீராக்க வாருங்கள்; மாகாண கல்வி அமைச்சர் அழைப்பு

வடக்கு மாகாணத்தின் கல்வியைச் சீராக, கண்ணியமாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் என்னுடன் சேர்ந்து வாருங்கள். கல்வியை உத்தமமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்படும் “ஆசிரியான்’ என்னும் பத்திரிகை நீண்ட காலங்களுக்குப் பின்னர் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது.

asiriyan

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நேற்றுப் பிற்பகல் நடந்த இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழர் வரலாற்றில் 2013 ஆம் ஆண்டை மறக்கமுடியாது. இது வரலாற்றில் ஒரு மைல்கல். மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மிகப்பெரும் ஆணையைத் தந்துள்ளனர்.

அதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் – விரும்புகிறார்கள். அவர்கள் எதனைச் சொல்ல விரும்புகிறார்கள் என்பதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

அந்த ஆணையை வைத்தே எதிர்வரும் 25 ஆம் திகதி மாகாண சபை முதல் அமர்வில் அனைவரும் செயற்பட வேண்டும். வடக்கு மாகாணத்தின் கல்வியைச் சீராக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் என்னுடன் சேர்ந்து வாருங்கள் – என்றார்.