ஐ.நா.வின் மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் தாமதம் தொடர்பிலான விமர்சனங்களை உள்ளடக்கியதாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 37ஆவது கூட்டத் தொடரில் விபரமான அறிக்கையொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பாக பல அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதில், இதுவரை நான்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான ஒரு அறிக்கையையும், இலங்கை அரசாங்கம் தொடர்பான ஒரு அறிக்கையையும் 37ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதேபோன்று ஐ.நா. சபையின் இரண்டு விசேட நிபுணர்களும் இலங்கை தொடர்பாக தலா ஒவ்வொரு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர். அந்தவகையில் நான்கு அறிக்கைகள் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளன.