ரெக்சியன் கொலை: யசிந்தன் சார்பிலும் பிணை விண்ணப்பம்

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் ரெக்சியனின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது சந்தேக நபர் முச்சக்கர வண்டி சாரதியான யசிந்தனை பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ். மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி விண்ணப்பத்தினை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மேல் நீதிமன்று வழக்கின் எதிர் மனு தாரர்களான சட்டமா அதிபர் மற்றும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யசிந்தன் சார்பில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை. இந்த நிலையில் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி மேல். நீதிமன்றில் கடந்த 18ஆம் திகதி பிணை மனத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முதலாவது சந்தேக நபரான வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமல் மற்றும் மூன்றாவது சந்தேக நபரான ரெக்சியனின் மனைவி அனிதா ஆகியோருக்கும் ஏற்கனவே பிணை விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.