யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே கைதுகள் தொடர்கின்றன – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

police-AJITH-ROHANAஇலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே சந்தேககத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலேசியவிலிருந்து நாடு கடத்தப்பட்டடு கைது செய்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நந்தகோபால் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தின் ஏழாலை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் கபிலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் இணைந்துக் கொண்டுள்ள இவர் அவ் அமைப்புடன் பல வருடங்கள் தொடர்புகளை வைத்திருந்த ஒரு நபராகவே கருதப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடக பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்டு அதன் பின்னர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் இலங்கைக்கான பிரதம அதிகாரியாக செற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர், போலி கடவுச்சீட்டின் மூலம் மலேசியா சென்று அதன் பின்னர் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 2013ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியம் நோக்கி, போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, செல்ல முயற்சித்த வேளையிலேயே, மலேசிய அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சிறை அடைக்கப்பட்டிருந்த இவர் தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இதன்படி, மார்ச் 6ஆம் திகதி நாடு கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையின் ஊடாக, நாட்டில் மீண்டும் யுத்த சூழ்நிலை ஏற்படுவதனை தவிர்த்துக் கொள்ள முடியும் என நான் நினைக்கின்றேன். இதன் மூலம் நாட்டிற்குள் இனவாதம் ஏற்படுதனை தவிர்த்துக் கொள்ள முடியும்.

இந்த நாட்டின் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற மூன்று இனப் பிரிவினருக்கும் ஒன்றாக வாழ முடியும். மீண்டும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படகூடாது. அதனாலேயே இவ்வாறான விசாரணைகளை நாம் முன்னெடுக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts