இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் மற்றும் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட திட்டக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இருவர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
வடக்கில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இந்த குழுவினர் வடமாகாணத்தில் இந்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவர்.
இந்தக்குழுவில் சௌகத்தா றோய் (திரினாமூல் காங்கிரஸ்), சந்தீப் தீக்த் (இந்திய தேசிய காங்கிரஸ்), அனுரா தக்கூர் (பாரதீய ஜனதாக் கட்சி), தனஞ்சய சிங்( பங்குஜான் சமாஜ் கட்சி), கௌட் யஸ்கி(காங்கிரஸ்), பிரகா ஜவதேகர (பாரதீய ஜனதாக் கட்சி) ஆகியோரும் பி.எஸ். இராகவன் சிறப்பு செயலாளர் அபிவிருத்தி கூட்டு நிர்வாகம், வெளிவிவகார அமைச்சு, பிமல் ஜுல்கா சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகரும், வெளிவிவகார அமைச்சு ஆகியோரே அடங்குகின்றனர்.
யாழ்ப்பாணம் மகேந்திரநகரில் (மகேந்திரபுரம்) அமைந்துள்ள இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட உள்ளதுடன், இந்திய வீட்டுத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்திலன் கீழ் எழுதுமட்டுவாளில் நிர்மாணிக்கப்படும் வீடுகளை பார்வையிடவும் உள்ளனர்.
அத்துடன், இந்திய அரசின் நிதியுதவியில் (இலங்கை ரூபா 220 மில்லியனில); புனரமைக்கப்பட்டு வரும் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உட்கட்டுமான வேலைகளில் காணப்படும் முன்னேற்றத்தை பார்வையிடவுள்ளதுடன் குருநகர் வட கடல் வலைத்தொழிற்சாலைக் விஜயம் செய்யவுள்ளனர்.
இந்த திட்டம் இந்திய அரசின் நிதியுதவியுடன், (இலங்கை ரூபா 162 மில்லியன்) புனரமைக்கப்படுகின்றது.
அத்துடன், இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும் கே.கே.எஸ் துறைமுகம் ஆழப்படுத்தும் திட்டத்தின் 3ஆம் கட்டத்தையும் அவர்கள் பார்வையிடுவர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தினை பார்வையிட பளை அருகே உள்ள சோரன்பற்று கிராமத்துக்கான உயர்மட்ட தூதுக்குழு எதிர்வரும் 11ஆம் திகதி விஜயம் செய்யும்.
அத்துடன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிலுள்ள சுதந்திரபுரத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தினையும் உயர்மட்ட தூதுக்குழுவினர் பார்வையிடுவர்.
அதனைத் தொடர்ந்து, இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளணங்களின் இணையத்தினர் இணைந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட வர்த்தகர்களுக்கு அவர்களின் சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்கு உதவி வழங்கும் முகமான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
அதேவேளை, கிளிநொச்சி அறிவியல்நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பீடம் மற்றும் விவசாய பீடத்தின் திறன் விருத்தித் துறைக்கான கட்டுமானப்பகுதிக்கும் உயர்மட்ட தூதுக்குழுவினர் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
யுத்தத்தின் போது சேதமான வர்த்தக நிலையங்களை புனரமைக்க இந்தியா நிதியுதவி
யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேதமடைந்த வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்கு இந்தியா 91 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கவுள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதரம் தெரிவித்துள்ளது.
யாழ். இந்திய துணைத் தூதரகம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் இணையத்தினர் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் யாழ். இந்திய துணைத் தூதரம் கூறியுள்ளது.
இந்த புனரமைப்புக்காக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து 1,230 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காசோலைகள் வழங்கப்படவுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இவர்களுக்குரிய காசோலைகளை வழங்கிவைக்கவுள்ளனர்.
இதற்கான நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் யாழ். இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.