யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் பூர்வீக இடங்களில் வாக்களிக்க வசதி

vote-box1[1] (1)யுத்தம் நடை பெற்ற காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் வாக்களிப்பதற்கு வசதியாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்த வாக்காளர் பதிவு விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் தொடர்பான பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட அல்லது தகுந்த காரணங்களுக்காக இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வசிப்பிடங்களில் வாக்களிக்க வசதி ஏற்படுத்தும் முகமாகவே அமைச்சரினால் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் யுத்த காலத்தில் நிரந்தரமாகக் குடியிருந்த வசிப்பிடங்களில் இருந்து குறிப்பாக வடமாகாணத்தில் இருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் அவர்களது காணிகளையும், சொத்துக்களையும் ஆவணங்களையும் கைவிட்டு இலங்கையின் வேறு மாகாணங்களில், வேறு தேர்தல் தொகுதிகளில் சென்று அங்கு தங்கியிருக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளியேற்றப்பட்ட அல்லது உரிய காரணங்களுடன் இடம்பெயர்ந்த மக்கள் வடமாகாணத்தில் உரிய தேர்தல் தொகுதியில் வாக்காளர்களாக தம்மை பதிவு செய்யுமாறு விண்ணப்பித்த படிவங்கள் தேர்தல் ஆணையாளரால் நடைமுறையில் உள்ள சட்டத்தை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டதையும் அமைச்சர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானவர்கள் வாக்காளர்களாக தகைமை பெறுவதற்குரிய தமது முகவரி பற்றிய தேவையை நிறைவு செய்வதும், வாக்காளர் பட்டியலை மீளாய்வு செய்வதற்காக வீடுதோறும் சென்று பரிசீலிக்கும் அலுவலர்களிடம் தகைமை பெறும் முகவரியொன்றை சமர்ப்பிப்பதும் மிகவும் சிரமமான காரியங்களெனவும் அப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுசன வாக்குரிமை என்பது மக்களின் இறைமையின் முக்கிய அம்சங்களில் ஒன்றென தெரிவித்துள்ள நீதியமைச்சர் ஹக்கீம் உள்ளக ரீதியாக வெளியேற்றப்பட்டு அல்லது இடம்பெயர்ந்து தீவின் ஏனைய பிரதேசங்களுக்குச் சென்று அங்கு தற்பொழுது தற்காலிகமாக வசிக்கும் வாக்குரிமைக்கு உரித்துடையவர்கள் முன்னர் நிரந்தரமாக அவர்கள் குடியிருந்த தேர்தல் மாவட்டத்தில் வாக்களிக்கக் கூடியவாறு வாக்காளர் பெயர் பட்டியலொன்றை தயாரிப்பதற்கு இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவது அவசியமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor