யாழ்.மாவட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் – ஜனாதிபதி

யாழ்.மாவட்டத்தில் மீளக் குடியேறிய முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இடர்பாடுகளுக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, றிஷாட் பதியூதீன் ஆகியோர் இணைந்து உரிய தீர்வு காண வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

mahintha-verasingam-hall

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் (13) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றத்தின் போதும் கிடைக்க வேண்டிய உதவித் திட்டங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்நோக்குவதாக முஸ்லிம் பிரதிநிதியொருவர் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இவ்விடயத்தில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா றிஷாட் பதியூதீன் ஆகியோர் இணைந்து உரிய தீர்வினைக் காணவேண்டுமென்பதுடன் இதற்கு வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகமும் பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் மக்களுக்கான தேவைகள் இன, மத, மொழி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே இயக்கச்சி சந்தி வளைவினால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொண்டு வந்தார்.

இதுவிடயத்திலும் கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் அவ்வளைவின் ஊடாக ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சீரான முறையில் வீதியை செப்பனிடுவதற்கு உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி செயற்திட்டங்கள் குறித்தும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.