யாழ் மாவட்ட படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் 2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (08) நடைபெற்றது.
51, 52 மற்றும் 55 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த உதவித்தொகையை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து 2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுள் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 480 மாணவர்களுக்கு ரூபா 750 வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகம் வழங்கப்பட்டது.
இதேபோல் தொடர்ந்து 12 மாதங்களுக்கு 750 ரூபா வீதம் வைப்பிலிடப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. சர்வ மத தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.