யாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில்!- யாழ்.இந்தியத் தூதரகம்

scholarship-applicationயாழ். மாணவர்களுக்கு இந்திய கல்வியைத் தொடர புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக யாழ் இந்தியத் துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இளமாணி, முதுமாணி மற்றும் ஆராய்ச்சிக்கான புலமைப்பரிசில், கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான புலமைப்பரிசில் வழங்கல். இந்திய அரசு இந்தியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் கற்பதற்குத் தகுதியான இலங்கை மாணவர்கள் 290 பேருக்கு புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு ஞாபகார்த்த புலமைப்பரிசில் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் புலமைப்பரிசில் 120 பேருக்கும், ராஜீவ்காந்தி புலமைப்பரிசில் 25 பேருக்கும், பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்து சமுத்திர சுற்றுவட்ட புலமைப்பரிசில் இரண்டு பேருக்கும், பொதுநலவாய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு ஐந்து பேருக்கும், சார்க் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கு மூன்று பேருக்கும், மௌலானா ஆஸாத் புலமைப்பரிசில் 50 பேருக்கும் வழங்கப்படவுள்ளது.

இவ் வருடத்துக்கான புலமைப்பரிசில் வழங்கலில் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 24 பேரில் 13 பேர் மூன்று வருட கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பொதுநலவாய மற்றும் சார்க் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 7 பேருக்கு கலாநிதிப்பட்ட ஆய்வு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய துணைத்தூதுரகம் அறிவித்துள்ளது.

இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாதாந்த செலவினக் கொடுப்பனவு, பாடநெறியின் காலப்பகுதி முழுமைக்குமான கல்விக் கட்டணம், தங்குமிடக் கொடுப்பனவு மற்றும் புத்தகங்கள், காகிதாதிகளுக்கான வருடாந்தக் கொடுப்பனவு ஆகியன வழங்கப்படவுள்ளது.

அத்துடன் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேராயத்தின் புலமைப்பரிசில் பெற்றவர்கள் அனைவருக்கும் முழுமையான சுகாதார வசதி, இலங்கையிலிருந்து செல்லும் போது இந்தியாவில் மிகக்கிட்டிய விமான நிலையத்துக்கான விமானப் பயணக் கொடுப்பனவு, இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கான கல்விச் சுற்றுலாக் கொடுப்பனவுடன் மேலும் பல உதிரிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக இந்திய துணைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசாங்கமானது புலமைப் பரிசில்களை திறமை அடிப்படையில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வருவதாகவும், புலமைப்பரிசில் தெரிவுகள் உயர்கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளது.