யாழில் இருதய சத்திரசிகிச்சை நிலையமொன்றை அமைக்கும் நோக்கில், ஒக்ஸோனியன் ஹார்ட் பவுன்டேசன் அனுசரணையில் யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் கலந்து கொள்ளும் துவிச்சக்கர வண்டிகள் பவனியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
இன்றுகாலை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பவனியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அமைச்சர் அவர்களுடன் ஊர்வலமாய் கைலாயப்பிள்ளையார் கோவில் முன்றலை வந்தடைந்தனர்.
பின்னர் துவிச்சக்கரவண்டி பவனி ஆரம்பமாகி இதன் முதற்கட்டம் யாழ்.கச்சேரி முன்றலை வந்தடைந்தது. இதன்போது ஏனைய மாணவர்களுடன் அமைச்சர் அவர்களும், சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரும் கலந்து கொண்டனர்.
பின்னர் கச்சேரி முன்றலில் வைத்து மாணவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், யாழ்.பல்கலைக் கழக துணைவேந்தர் வசந்திர அரசரட்ணம் அவர்களும் உரைநிகழ்த்தினர்.
மேற்படி துவிச்சக்கர வண்டி பவனி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பை சென்றடையவுள்ளது.
இந்த நிகழ்வில் வட மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் , யாழ்ப்பாண மாநகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராசா, நொதேன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சாமி, வைத்திய யாழ்.பல்கலை மருத்துவ பீடாதிபதி கலாநிதி பாலகுமார், ஒக்ஸோனியன் ஹார்ட் பவுன்டேசன் நிறுவனர் கலாநிதி ரவி பெருமாள்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.