யாழ்.மக்களை கலாசார பிறழ்வு, போதை பொருட்களிலிருந்து பாதுகாக்க புதிய குழு

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கலாசார பிறழ்வு மற்றும் போதைப் பொருள் பாவனையிலிருந்து யாழ்.மக்களை பாதுகாப்பதற்காகவும் யாழின். கலாசாரத்தினை பேணுவதற்காகவும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் புதிய குழு ஒன்றை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அதன் பிரதிநிதி சீ. வீ. கே. சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் இங்கும் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

‘யாழின் கலாசாரத்தை காப்போம், போதை பொருளைத் தடுப்போம்’ என்ற தொனிப் பொருளில் வாழ்த்து அட்டைகள் யாழில் உள்ள சகல பிரதேசங்களிலும் விநியோகிக்கபடவுள்ளன.

இதேவேளை, மாணவ சமூகம் மற்றும் கல்விச் சமூகத்திற்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பெரியளவில் கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் எமது சமூக வாழ்வியலில் சில தடுமாற்றங்கள், மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை உணரக்கூடியதாக உள்ளது. இதனால் எமது பண்பாடான சமூகத்தைப் காப்பற்ற வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு

யாழ்.அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் ‘கலாசாரத்தை காப்போம் போதைப் பொருளைத் தடுப்போம்’ என்னும் செயற்திட்டம் ஒரு ஆரம்பப் புள்ளி. இந்த செயற்திட்டத்திற்கு உயிரோட்டம் வழங்குவதற்கு யாழ்.பெண்கள் அமைப்புக்கள், யாழ்.கல்விச் சமூகங்கள் மற்றும் ஊடகங்களின் பங்களிப்பும் வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எஸ். திலகரெட்ணம், கே. சற்குணராஜ ஆகிய யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.