யாழ் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இன்று மதியம் 12 மணிதொடக்கம் 1 மணிவரை கவனவீர்ப்பு போராட்டத்திலீடுபட்டனர்.
இப்போராட்டம் வட மாகாணத்துக்கு எனக் கோரப்பட்ட தாதியர் எண்ணிக்கையை விடக் குறைந்தளவில் தாதியர்கள் நியமிக்கப்பட்டமை மற்றும் அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் சில தாதியரை மீளப்பெற்றுக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களை மீண்டும் வடக்குக்கு நியமிக்குமாறு கோரியுமே இந்தக் கவனவீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த போராட்டம் தொடர்பாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்க வடமாகாண இணைப்பாளர் பி.சிவயோகம் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தாதியர் ஆளணிகள் பற்றாக்குறை நிலவியதால் நோயாளர்களுக்கு தகுந்த பராமரிப்பு எதுவும் இல்லை. ஆகவே தான் இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேட்டபோது அவர் முதலில் இது தொடர்பில் நல்ல இணக்கப்பாடு தெரிவித்தார். ஆயினும் தற்போது இது பற்றி அவரும் தட்டிக்கழிக்கிறார்.
அது மட்டுமன்றி யாழ். போதனா வைத்தியசாலைக்கு 250 தாதியர்களை வழங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.அதன்படி பின்னர் 100 பேரையே தருவோம் என்று கூறியது இப்போது 70 தாதியர்களையே நியமித்துள்ளனர்.ஆனால் அந்த 70 பேரில் 9 பேரை மீளப்பெற்றுக்கொண்டுள்ளனர்.மேலும் இவ்வாறு புதிதாக நியமிப்பவர்கள் கூட அரசியல் செல்வாக்குகளினால் வெளி இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.இதனால் மீதமுள்ள தாதியர்கள் பாதிப்புக்குள்ளாவதோடு நோயாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட தாதியர்கள் தங்குவதற்கு இடவசதிகள் அற்ற நிலையில் அவர்கள் தற்போது மானிப்பாயில் உள்ள விடுதியிலும், ஆரிய குளப்பகுதியிலும் தங்குகின்றனர். அது மட்டுமன்றி தாதியர் விடுதி அமைப்பதன் வரைபடம் வரையப்பட்டுள்ளது ஆனால் அதற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.ஆகவே தான் இந்த போராட்டத்தில் முக்கியமாக ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் அத்துடன் தாதியர்களுக்கு தங்குமிட வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.