யாழ். போதனா வைத்தியசாலையில் தமிழ் அரசியல் கைதிக்கு கைவிலங்கிட்டு சிகிச்சை!

மனநிலை பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, தமிழ் அரசியல் கைதியான இராசையா ஆனந்தராஜ் அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

rasaiya-anantha-raj

இவர் கைவிலங்கிடப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆவது வார்ட்டில் 19ஆம் இலக்கக் கட்டிலில் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இராசையா ஆனந்தராஜ் தனது விடுதலைக்காக பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த கைதியை அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்ற அனுமதியளித்தமை தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த கைதியின் ஆரோக்கியம் தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகளின் கோரிக்கைக்கிணங்கவே இடமாற்றம் செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.

மேலும், கைதி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு மறுத்ததையடுத்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார் எனவும் கூறினார்.

ஏன் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை கைவிலங்குடன் வைத்து சிகிச்சையளிக்கிறீர்கள் எனக் கேட்டபோது, கைதி மிகவும் மோசமான மனநிலைக் குழப்பத்திலுள்ளார். ஆகையால் அவரை கைவிலங்குடனேயே வைத்தியசாலையிலும் சேர்த்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இராசையா ஆனந்தராஜ் என்பவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்ட பின்னர் 2014ஆம் ஆண்டு மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும், குறித்த கைதியை சட்டவிரோதமாக கைவிலங்கிட்டு சிகிச்சை வழங்கப்படுவதை மறைப்பதற்காகவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது என்ற நம்பகமான தகவல் கிடைத்துள்ளது.

Related Posts