யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்

fight-warயாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த கோண்டாவில்லினைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ். ஆர்த்திகன், இருபாலையினைச் சேர்ந்த 24 வயதுடைய எஸ்.சிவரூபன் ஆகிய இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்வையிடுவதற்கு ஒரு நோயாளருக்கு, இரண்டு பார்வையிடுவோர் அனுமதியட்டை என்ற வகையில் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஒரு நோயாளர் அனுமதியட்டையுடன் நால்வர் உள்ளே செல்ல முயன்றுள்ளனர். இதனை அங்கு கடமையிலிருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்துள்ளனர்.

இதனால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படவே, பார்வையிட வந்த மேற்படி நால்வரும் கற்கள் மூலம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தாக்கியுள்ளனர்.

இதனால் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் காண்பித்த நோயாளர் அட்டையின் விடுதி இலக்கத்தினை வைத்து, அங்கு அனுமதிக்கப்பட்டு நோயாளர் மூலம் தாக்குதல் மேற்கொண்ட நால்வரில் இருவரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor