யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், பெரும்பான்மையின மாணவர்களுக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலை ‘துரதிர்ஷ்டவசமான சம்பவம்’ என வர்ணித்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன், இச்சம்பவம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தும் போது, ஏனைய பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் விடயங்கள் குறித்தும் அரசாங்கம் கவனஞ்செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புதுமுக மாணவர்களை வரவேற்கும் இந்நிகழ்வில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்படலாம் எனத் தெரிவித்த அவர், புரிந்துணர்வின்மை காரணமே யாழ். சம்பவம் இடம்பெற்றதாகவும் அதிர்ஷ்டவசமாக, இந்நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் எம்.பி, ‘இது தொடர்பில், அனைவருக்கும் கடமையுள்ளது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், மீண்டும் திறக்கப்பட்டு, திரும்ப இயங்க வேண்டும். சில துறைகள், ஏற்கெனவே ஆரம்பித்திருக்கின்றன’ என்றார்.
ஏனைய பல்கலைக்கழங்களில் சிறுபான்மையினரான தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடப்பதாகவும் அவர்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் வெளியாகும் செய்திகளைச் சுட்டிக்காட்டுவது போன்று பேசினார்.
‘ஏனைய பல்கலைக்கழங்களில் இடம்பெறுவன பற்றி விவரமாகக் கதைக்க நான் விரும்பவில்லை. அரசாங்கம், ஏனைய பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பிலும் கருத்திற்கொள்ள வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, நல்லிணக்கத்தைக் குழப்புவதற்கான முயற்சியாக இது இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை வெளியிட்ட அவர், பின்னணியில் அரசியல் காணப்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியதோடு, இச்சம்பவத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவித்து அமர்ந்தார்.