யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடயம் தொடர்பில் இந்திய அரசு அமைதியான முறையில் இராஜதந்திர ரீதியில் சில நடவடிக்கைளை எடுத்துள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ். மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். இந்திய துணைத் தூதுவராலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற நிலை இந்திய அரசினது முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.
இருந்தும் இரு நாடுகளினது உறவுகளில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாமல் அமைதியான முறையில் சில இராஜதந்திர நகர்வுகள் நடைபெற்றுள்ளது என்றார்.
இந்திய அரசு ஈழத்தமிழர் விடயத்தில் எதிலும் அமைதியாகத்தானே இருக்கிறது. எந்தவிடயத்திலும் சுறுசுறுப்பாக செயற்படுவதைக் காண முடியவில்லையே என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம்,
நீங்கள் எந்த விடயத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறீர்கள் என எனக்கு விளங்கவில்லை. இருந்தும் இந்திய அரசு அமைதியான வழியில் இராஜதந்திரங்களை மேற்கொண்டு வருகின்றது என்ற உண்மை உங்களுக்குத் தெரியவரும்.
இந்தியாவின் முக்கிய நோக்கம் யாழில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதேயாகும். அதற்காக கல்விக்கான பல புலமைப்பரிசில்களை அறிமுகப்படுத்தவுள்ளது என்றார்.