இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பித்துள்ள நிலையில், விரிவுரைகளில் கலந்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தினமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டு அவர்கள் வந்து சேர்வதற்கான கால அவகாசம் குறைவாகவே காணப்பட்டதாகவும் அதனாலேயே மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்படுவதாகவும் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 60 சதவீதமானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். இந்நிலையில், இன்றைய தின விரிவுரைகளில் சுமார் 20 சதவீதமான மாணவர்களே கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்புக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சில பீடங்களின் பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகள் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.