யாழ் பல்கலையின் வர்ண விருதுகள் நிகழ்வு

5(1867)யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி அலகும் விளையாட்டு அவையும் இணைந்து நடத்திய வர்ண இரவுகள் நிகழ்வில் 117 வீர வீராங்கனைகள் வர்ண விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த வர்ண இரவுகள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்தவெளி அரங்கில் நேற்று சனிக்கிழமை (19) இரவு விளையாட்டு அவையின் தலைவர் சி.மயூரன் தலைமையில் நடைபெற்றது.

2013 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டி வீர, வீராங்கனைகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைகழக பீடங்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கும் இந்நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட்டன.

அந்தவகையில், ஆண்கள் பிரிவில் 53 முழு வர்ண விருதுகளும், 21 அரை வர்ண விருதுகளுமாக மொத்தம் 74 விருதுகளும், பெண்கள் பிரிவில் 33 முழு வர்ண விருதுகளும், 10 அரை வர்ண விருதுகளுமாக 43 விருதுகளும் வழங்கப்பட்டன.

வர்ண விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணித் தலைவியும் (1997 – 1998) வெள்ளவத்தை ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளருமான திருமதி.ஜெயந்தி சோமசேகரம் டி சில்வா ஆகியோர் வீர, வீராங்கனைகளுக்கான விருதுகளை வழங்கி வைத்தார்கள்.

Recommended For You

About the Author: Editor