யாழ்.பல்கலைக்கழக சூழலிலிருந்து படையினர் விலகிக்கொள்வர் :- கட்டளைத் தளபதி

யாழ்.பல்கலைக்கழக சூழலிருந்து படையினரையும், பொலிஸாரையும் உடனடியாக விலக்கிக் கொள்வதென யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மகிந்தஹத்துருசிங்க தெரிவித்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்களில் 3பேரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.யாழ்.பலாலியில் இன்று மாலை யாழ்.பல்கலைக்கழக பீடாதிபதிகள், துணைவேந்தர் மற்றும் படையினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போதே தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த மருத்துவ பீட மாணவன் சுதர்சன் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாணவர்கள் 3பேரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், விசாரணையின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுளார்.

இதேபோல் பல்கலைக்கழக சுற்றாடலிலிருந்து படையினரை விலக்கிக் கொள்ளவேண்டும் என பல் கலைக்கழக சமுகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொலிஸாரும், படையினரும் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் எனவும், பொலிஸார் மட்டும் பல்கலைக்கழகத்திற்கு அப்பால் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளதுடன், அரசியல்வாதிகள், படையினர் போன்றோர் பல்கலைக்கழகத்திற்குள் முன் அனுமதியின்றி உள்நுழைய கூடாதெனவும் படையதிகாரி உத்தரவிட்டுள்ளார்.