வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோரின் கையொப்பத்துடன் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்தை சாதாரண குற்றவியல் சம்பவம் எனக் கருதாது, மாணவர்கள் இவ்வாறு நடந்துகொண்டமைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறியவேண்டுமெனத் தெரிவித்துள்ளதோடு, அதனை நிவர்த்திசெய்வதற்கான வழிமுறைகளையும் கண்டறியவேண்டும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறானதொரு நிலைமைக்குச் செல்வதற்கு அடிப்படையாக இருந்த காரணிகள் என்ன என்பதை முற்றாக அறிவதற்கு ஆக்கபூர்வமான விசாரணைக்குழுவொன்று அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்ததிற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் யுத்த குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகள் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றன.
இவ்வாறான ஒரு சூழலில் வடமாகாண பல்கலைக்கழகங்களில் பிற மாவட்ட மாணவர்களை அதிகமாக உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் அந்த மாணவர்கள் தமது கலை கலாசாரங்களை யாழ் மண்ணில் திணக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வடக்கு கிழக்கில் தேவைக்கதிகமான இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை மாணவர்களுக்கு இடையிலான மோதல்களுக்கு காரணமாக அமைந்துள்ளனவா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களைத் தட்டிக்கழித்தால் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகள் உருவாகுமெனவும், முன்பும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதன் காரணத்தினாலேயே இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.