யாழ்ப்பாண பல்கலைகழகத்தை அரசியல் சார்பான கல்வி நிறுவனமாக மாற்ற நாம் அனுமதிக்க மாட்டோம் என யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.தசிந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு அரசியல் ரீதியாக உள்வாங்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகவேண்டும் எனக்கோரி, வெள்ளிக்கிழமை (30) மதியம் 12 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் சனிக்கிழமை (31) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.தசிந்தன் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். பல்கலைகழகம் அரசியல் கட்சி சார்பான பல்கலைகழகம் அல்ல. சில அரசியல் கட்சிகள் தங்கள் சுய இலாபத்திற்காக வெளிவாரி உறுப்பினர்களை நியமித்து உள்ளார்கள். அவர்கள் தாங்களாகவே பதவி விலகி செல்லவேண்டும்.
கடந்த காலங்களில் இவர்கள் எங்கள் பல்கலைகழகத்தை சீரழித்து வந்துள்ளார்கள். பலதடவைகள் உரிய தரப்பினருக்கு எடுத்துரைத்தும் எமது பல்கலைகழக சமூகத்தின் கருத்தை அவர்கள் உதாசீனம் செய்துள்ளார்கள்.
அதனாலேயே பல்கலைகழக ஆசிரியர் சங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்தது. அதற்கு பல்கலைகழக அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கி உள்ளார்கள்.
இந்த போராட்டம் எமது முதல் கட்டமான போராட்டம். இந்த போராட்டத்திற்கு மதிப்பளித்து வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் தாங்களாகவே பதவி விலகி செல்ல வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டத்திற்கு மதிப்பளித்து உரிய தரப்பினர் உரிய தீர்வினை எமக்கு வழங்க வேண்டும்.
இல்லாவிடின் எமது அடுத்த போராட்டம் பல்கலைகழக அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைத்த பாரிய போராட்டமாக முன்னெடுக்கப்படும்.
யாழ். பல்கலைகழகமானது வடமாகாணத்திலேயே பாரிய கல்வி நிறுவனம் ஆகும். அந்த கல்வி நிறுவனத்தை அரசியல் சார்பான நிறுவனமாக மாற்ற நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.