யாழ்.மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்களத்துக்கு பொறுப் பதிகாரியாகப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஊடகத் துறை அமைச்சினால் தகவல் திணைக்கள அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இருப்பினும் அந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாக யாரும் நியமிக்கப்படவில்லை.
கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சிச் சபை தேர்தலுக்காகத் தகவல் திணைக்களத்துக்கு தற்காலிகமாக இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். முஸ்லிம், சிங்கள அதிகாரிகளே இவ்வாறு நியமிக்கப்பட்டனர். அவர்கள் தேர்தல் முடிந்ததும் கொழும்பு திரும்பிவிட்டனர்.
இதன் பின்னர் அதிகாரிகள் எவரும் நியமிக்கப்படாத நிலையில், தகவல் திணைக்கள செயற்பாடுகளும் முடங்கியிருந்தன. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிங்கள உத்தியோகத்தர் ஒருவர் தகவல் திணைக்களத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் பேசும் மக்களைக் கொண்டுள்ள யாழ்ப்பாணத்தில் சிங்கள அதிகாரிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வருட ஆரம்பத்தில் யாழ்.மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துக்கு இரண்டு சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது தகவல் திணைக்களத்துக்கும் சிங்கள உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.