யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 7பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று மானிப்பாய் பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து நேற்று வியாழக்கிழமை (25) கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 4 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ பாட், கைச்சங்கிலி சங்கிலி, டி.வி.டி பிளயர் ஆகியன கைப்பற்றப்பட்டன.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
‘செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் கையை வெட்டி குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த 24 வயதுடைய 12 ஆவது சந்தேகநபர் (ஏற்கனவே 11 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்) புதன்கிழமை (24) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இவர் காங்கேசன்துறை இராணுவத்தினருக்கு முன்னர் உதவியாளராகச் செயற்பட்டார் என்பது தற்போது, இராணுவத்தினருடன் தொடர்பு இல்லையென்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
சந்தேகநபரிடமிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதுடன், அவருடை அலைபேசியும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை நடவடிக்கையுடன் தொடர்புடைய கொள்ளைக்கார கும்பலுடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார், கொள்ளைக்கார கும்பலைச் சேர்ந்த நபர்களை கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் வைத்து வியாழக்கிழமை (25) மடக்கிப் பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் கிளிநொச்சி, மானிப்பாய், கட்டுடை மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.