யாழ்.குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் நேற்றுக் காலை 8.30 மணி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
இதில் இந்த மாதத்தில் மாத்திரம் 16.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் இந்த வருடம் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் பெரும் அழிவை எதிர்கொண்டிருந் தனர்.
இந்த நிலையில் கடந்த ஒக்ரோபர் மாதத்தின் இறுதிப் பகுதியிலும், நவம்பர் மாதத்தின் முற்பகுதியிலும் தொடர்ச்சியான மழை குடாநாட்டில் பெய்தமையால் விவசாயிகள் ஓரளவு நன்மையை எதிர்கொண்டிருந்தனர்.
வழமையாக வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மூலம் வருடத்தின் இறுதிக் காலப்பகுதியில் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகுவது வழமை.
இந்த மழையை நம்பி விவசாயிகள் பலர் நெல் விதைத்துள்ள நிலையில் மழை தொடர்ச்சியாகப் பெய்யாத காரணத்தால் நெற் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 வருட காலத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான 976.5 மில்லிமீற்றர் என்ற மழை வீழ்ச்சியே இதுவரையில் குறைவான மழைவீழ்ச்சியாக இருந்தது.
2011 ஆம் ஆண்டு 1470.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் (டிசெம்பர்295.1 மில்லி மீற்றர், நவம்பர்518.1 மில்லிமீற்றர்), 2010 ஆம் ஆண்டு 1496.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் (டிசெம்பர்375.8 மில்லிமீற்றர், நவம்பர்492.2 மில்லிமீற்றர்), 2009 ஆம் ஆண்டு 1270.9 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் (டிசெம்பர் 401.7 மில்லிமீற்றர், நவம்பர்371.6 மில்லிமீற்றர்), 2008 ஆம் ஆண்டு 1811.8 மில்லிமீற்றர் (டிசெம்பர்184.5 மில்லிமீற்றர், நவம்பர்830.8 மில்லிமீற்றர்) மழை வீழ்ச்சியும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு 725.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. இனிவரும் நாள்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யாது விட்டால் விவசாயிகள் பெரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.என்று அவர் மேலும் கூறினார்.