யாழ்ப்பாணத்தில் ‘யாழ் ஊடக அமையம்’ அங்குரார்ப்பணம் மற்றும் மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஆகியன நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இராசாவின் தோட்டம் வீதியிலுள்ள ‘யாழ் ஊடக அமையத்தில் யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஆசிரியர் சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் செய்தியாளர்கள் மங்கள விளக்கெற்றி வைத்ததைத் தொடர்ந்து யாழ். ஊடக அமையத்தின் அலுவலகத்தினை மூத்த ஊடகவியலாளர் பெருமாள் திறந்துவைத்தார்.
யாழ். மாவட்டத்தில் ஊடகத்துறையில் சேவையாற்றிய நான்கு மூத்த ஊடகவியலாளர்கள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. தொடந்து நான்கு மூத்த ஊடகவியலாளர்களுக்கும் நிகழ்வில் வருகை தந்திருந்த பெரியோரால் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டதோடு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டன.
‘யாழ் ஊடக அமையமான யாழ் மாவட்டத்தில் உள்ள இளம் ஊடகவியலாளர்களின் முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதோடு நீண்ட காலமாக இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இனிவரும் காலங்களில் யாழ். ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கள், செயலமர்வுகள் மற்றும் இளம் பத்திரிகையாளர்களுக்கான விசேட பயிற்சிகள் இந்த அமையத்தின் ஊடாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.