உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த சட்டத்தரணி விரைவில் கைது செய்யப்படுவார் என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது, உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஒரு வருடம் கடந்து விட்ட நிலையிலும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும்,
இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருடைய விசாரணை என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்றும் செய்தியாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் இன்று பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர், இந்தச் சம்பத்துடன் நேரடித் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தச் சம்பவத்தில் ஒரு சட்டத்தரணி தொடர்புபட்டிருப்பதால் நடவடிக்கை தொடர்பாக விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் இந்த அறிக்கை தொடர்பான சட்டமா அதிபரின் உத்தரவு கிடைத்தவுடன் இவர்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.